மாகாண சபைத் தேர்தல் - அரசு இழுபறி!
|
மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்திற்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் நிலவி வந்த இழுபறிகள் தற்போது ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனத் தெரியவருகிறது. |
|
இருப்பினும் எதிர்வரும் ஜுன் மாதம் இறுதியில் தேர்தல் முறைமை குறித்த விசேட அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர் உறுதியான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைய தேர்தலை விரைந்து நடத்துவதா? அல்லது தற்போதைய அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதனை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதா? என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கும் பட்சத்தில் சர்வதேச ரீதியாக ஏற்படக்கூடிய இராஜதந்திர நெருக்கடிகள் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு தற்போது விசேட அவதானம் செலுத்தி வருவதாக அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இவ்வருட இறுதியில் அரசாங்கம் சர்வதேச அரங்கில் இரண்டு பாரிய சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை குறித்த சர்வதேச வாக்குறுதிகளுக்கு இலங்கை அரசு பதிலளிக்க வேண்டியுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றமை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராஜதந்திரிகளுடன் அரசாங்கம் ஏற்கனவே முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இந்த இரு சர்வதேச நெருக்கடிகளிலும் தீர்மானமிக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மறுசீரமைப்பு மற்றும் சர்ச்சைக்குரிய நீதித்துறை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, புஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கிய துறைகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 27 நிபந்தனைகளை இலங்கை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், பல முக்கிய விடயங்களில் அரசாங்கத்தின் தற்போதைய பதிலளிப்புகள் மற்றும் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென ஐரோப்பிய இராஜதந்திர வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமையானது அரசாங்கத்தை நிதானமாகச் செயற்படத் தூண்டியுள்ளது. இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் ஊடாக தேர்தல் முறைமை மாற்றங்கள் மட்டுமன்றி, புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திர மையங்களுடன் ஏற்கனவே விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளதுடன், புலம்பெயர் மக்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் தற்போது வெளிவிகார அமைச்சிடம் மேலதிக நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |