நிர்மலா சீதாராமன் இத்தாலிக்கு விஜயம்!

05.05.2025 08:17:44

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB -ஏடிபி) ஆளுநர்கள் குழுவின் 58-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

4 ஆம் திகதி முதல் 7  ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந் நிகழ்வில்  நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையைச் சேர்ந்த இந்திய அதிகாரிகள் குழுவிற்கு  தலைமை வகித்து அவர்   பங்கேற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தக் கூட்டங்களில் ஏடிபி ஆளுநர்கள் குழுவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள், ஏடிபி உறுப்பினர்கள், சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஆளுநர்களின் வணிக செயல்பாட்டு அமர்வு, ஆளுநர்களின் முழுமையான அமர்வு, எதிர்கால நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கு ஆகியவற்றில் மத்திய நிதியமைச்சர் பங்கேற்பார் எனக் கூறப்படுகின்றது.

மேலும் ஏடிபி-யின் 58-வது ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இத்தாலி, ஜப்பான், பூட்டான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.