கொரோனா தொற்றாளர்களை பெட்டியில் அடைக்கும் கொடுமை

15.01.2022 15:09:07

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று ஏற்பட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கு உலோக பெட்டியில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை உலகையே மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.  சீனாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. சீனாவில் கொரோனா பரவல் தீவிரமானதால், கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை உலோக பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த உலோக பெட்டியில் மரக்கட்டில் மற்றும் ஒரு கழிப்பறை உள்ளது. காற்றோட்டத்துக்கான வசதியும் உள்ளது. தொற்றுக்கு ஆளானவர்களை இரண்டு வாரங்களுக்கு இந்த உலோக பெட்டியில் அடைத்து விடுகின்றனர். சிறுவர், கர்ப்பிணி, முதியோர் என எந்த பாகுபாடும் இன்றி இதில் அடைக்கப்படுகின்றனர்.

இதில் அடைக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று முற்றிலும் இல்லாத நாடாக சீனாவை மாற்ற, அந்த நாட்டு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உணவுப் பொருள் வாங்கக் கூட, வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடக்கப்பட்டுஉள்ளனர்.