சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து!

15.02.2025 11:28:23

யாழ்ப்பாணம் - தையிட்டியில் உள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அத்தகைய சூழ்நிலையில் உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்படத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்

இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, விகாரையை உடைக்க வேண்டும் என தான் கூறியது இனவாத கருத்து அல்ல என்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் இதுவே தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.