நயினாதீவில் படகு கவிழ்ந்து விபத்து.
நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
நயினாதீவு கடற்பரப்பில் பயணியர் படகொன்று நேற்று (16) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த படகில் பயணித்த 8 பயணிகள் மற்றும் 2 படகோட்டிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த படகு நேற்று (16) பிற்பகல் 3.20 மணியளவில் குறிகாட்டுவான் இறங்குத்துறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டிருந்தது.
எனினும், படகு இலக்கை சென்றடையாத நிலையில் அந்த படகு தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கடற்படையினர் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
சீற்றமான கடல் நிலைமைகளுக்கு மத்தியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிலிருந்த அனைவரும் நீந்தி நயினாதீவு கரையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்திய சிகிச்சை வழங்குவதற்காக அவர்களை நயினாதீவிலிருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் கடற்படையினர் எடுத்துள்ளனர்.