ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

04.12.2025 09:04:39

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், 23 ஆவது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இன்று (04) இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

 

இன்று மாலை அவர் புது டெல்லியை சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, ​​புட்டின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இதில் முதன்மையாக வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புட்டினுடன் ரஷ்ய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் நாட்டின் வணிக சமூகத்தைச் சேர்ந்த முன்னணி நபர்களும் இந்த விஜயத்தில் பங்கெடுக்கவுள்ளனர்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து புட்டின் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை. 

அவர் இறுதியாக 2021 டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

இந்த ஆண்டின் செப்டம்பர் 1 ஆம் திகதி சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் ஜனாதிபதி புட்டினும் சந்தித்தனர்.

மேலும் 2025 ஆம் ஆண்டில் ஐந்து தொலைபேசி உரையாடல்களை நடத்தியுள்ளனர்.

 

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள 23 ஆவது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டின் போது இரு நாடுகளுக்கு இடையிலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் ஏற்பட்டுள்ள கூர்மையான சரிவின் பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் பரந்த நோக்கமாகும்.