கச்சத்தீவை மீட்டெடுப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது!

17.07.2025 12:11:26

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத்  தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்றும் நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது எனவும்,  இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று  தெரிவித்துள்ளது.

உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.