ஐ.நாவின் பொறுப்புக்கூறல்.
|
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலியுறுத்தியுள்ளனர். |
|
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டது. இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அவற்றை அரசாங்கம் எவ்வாறு கையாளவேண்டும் என்பது பற்றிக் கருத்துரைத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், இலங்கையில் யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார். 'மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் தொடர்ந்து வலுப்பெற்றுவருகிறது. இதனை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?' எனவும் அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி பற்றியும், அதற்கு அப்பாலும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டார். அதேவேளை யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் அதன் நீட்சியாக தற்போதுவரை பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அம்மீறல்கள் பற்றி முறைப்பாடு அளிப்பவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் 'இப்புதிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறது என்பது பற்றித் தெளிவுபடுத்தப்படவேண்டும். அதுமாத்திரமன்றி நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்படவேண்டும்' என வலியுறுத்தினார். அதேபோன்று இவ்வறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகரும், சிவில் செயற்பாட்டாளருமான ஷ்ரீன் ஸரூர், 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 17 வருடங்களின் பின்னர் வெளிவந்திருக்கும் இந்த அறிக்கையானது, இலங்கையில் போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் அவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் நீண்டகாலத் தனித்த போராட்டத்தின் பெறுபேறாகத் திகழ்கிறது. பாலியல் வன்முறைகள் தொடர்பில் பேசுவதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக மீறல்களில் ஈடுபட்டவர்கள் சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் வாழும் பகுதிகளை கையகப்படுத்தியவர்களாகவும் இருக்கும்போது, அதுபற்றிப் பேசுவது மிகக்கடினமானதாகும். ஆனால் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுத்ததன் பின்னரும், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து, தமக்கான நீதியைக் கோரியிருப்பதுடன், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். இந்த அறிக்கை இலங்கைக்கு மாத்திரமன்றி, பாலியல் வன்முறைகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்ற, தற்போது மோதல்கள் இடம்பெற்றுவரும் நாடுகளுக்கும் மிகமுக்கியமானதாகும்' எனத் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், அக்கடப்பாடு நிறைவேற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். |