மதுரை அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு 8-வது அதிசயமாக அமையும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

11.08.2023 10:12:40

பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை. மதுரை: Powered By PauseUnmute Loaded: 0.16% Fullscreen அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 35 ஏக்கரில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் நாள்தோறும் எடப்பாடியாரின் தகுந்த வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெயிலில் வாடக்கூடாது என்று எடப்பாடியார் ஆணையின் படி கூடுதலாக வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் சதுரடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட 40 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாகவும், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங்ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அதிசயம் ஏழாக இருந்தாலும் எடப்பாடியார் உரையாற்றும் போது, இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும். பாராளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்சத் தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து, அவருக்கு நடந்த கொடுமையை, அவமானத்தை எடுத்துரைத்தார். புரட்சித்தலைவி அம்மா அப்போது நான் மீண்டும் சட்டசபைக்கு முதலமைச்சராக வருவேன் என்று சபதம் போட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். பெண்கள் மீது பாசம் உள்ளது போல தி.மு.க. நாடகம் போடுகிறது. அம்மாவின் தைரியத்தை டெல்லியில் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும். இவ்வாறு அவர் கூறினார்.