யூரோ கோப்பை - பின்லாந்து, பெல்ஜியம் அணிகள் வெற்றி
பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டென்மார்க் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
யூரோ கோப்பை ரொ கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் பாதியின் பிற்பகுதியில் டென்மார்க் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
மருத்துவ குழுவினர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில், கிறிஸ்டியன் எரிக்சன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார் என டேனிஷ் கால்பந்து யூனியன் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பின்லாந்து வீரர் ஜோயல் 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பின்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம், ரஷ்யா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் லுகாகு 10வது நிமிடத்திலும், தாமஸ் முனேர் 34வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.
இதனால் முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 2-0 என முன்னிலை பெற்றது. ரஷ்ய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியின் இறுதியில் லுகாகு 88வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மேலும் ஒரு ஆட்டத்தில் வேல்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.