அரசாங்கம் ஜனநாயகப் பண்புகளை மதிக்கவில்லை!
|
மக்கள் வேண்டாம் என்று எதிர்க்கும் ஒரு விடயத்தை அரசாங்கம் தன் அதிகாரப் பலத்தால் செய்ய முற்படுவது, அவர்கள் ஜனநாயகப் பண்புகளை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். |
|
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நீதிபதிகள் மட்டுமன்றி, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் அடிமட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை ரீதியிலான விவாதம் அவசியமாக இருக்கிறது. அதை விடுத்து, திடீரென ஒரு சட்டமூலத்தைக் கொண்டுவந்து உயர் நீதிமன்றங்களில் இருக்கும் குறிப்பிட்ட சில நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் காலத்தை மாத்திரம் நீடிப்பதற்கு முற்படுவதானது முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணானது. அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது வெறும் 8 அல்லது 16 நபர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக மட்டுமாக இருக்குமாயின், அது ஒரு அப்பட்டமான அரசியல் தேவையை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கையாகும். இத்தகைய போக்கு நாட்டின் மிக உயரிய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும். முன்னொரு காலத்தில் பாராளுமன்ற பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முற்பட்டபோதும், பிரதம நீதியரசரைப் பதவியில் இருந்து துரத்தியடித்தபோதும் ஏற்பட்ட மோசமான விளைவுகளை நாடு ஏற்கனவே கண்டுள்ளது. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு மாத்திரம் செவிசாய்க்காமல், நாட்டின் கல்விமான்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றார். |