மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டினால் வெற்றி !

16.08.2021 11:49:07

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஜமைக்காவில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 217 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலாம் 56 ஓட்டங்களையும் பஷீம் அஷ்ரப் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரோச் 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 253 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கார்லோஸ் பிரத்வெயிட் 97 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும் பஷிம் அஸ்ரப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 36 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 203 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 55 ஓட்டங்களையும் அபிட் அலி 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் ரோச் 3 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 168 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 1 விக்கெட்டினால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெரமைன் பிளக்வுட் 55 ஓட்டங்களையும் கெமார் ரோச் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் பஷிம் அஸ்ரப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜெய்டன் சீல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 20ஆம் திகதி ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.