தமிழக தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெறும் - சொல்கிறார் மத்திய மந்திரி ஜவடேகர்
தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. இதற்கிடையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று, பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களை
சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார்.
இதேபோல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டுள்ளனர். சென்னை அருகே மறைமலைநகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* தமிழக தேர்தலிலும் பாஜக அமோக வெற்றிபெறும்.
* மக்கள் வளர்ச்சியை எதிர்பாக்கின்றனர். மலிவான குடும்ப அரசியலை வெறுக்கின்றனர்.
* நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் பாஜக்வுக்கு மாபெரும் வெற்றி, காங்கிரசுக்கு படுதோல்வி
என்றார்.