
ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!
காசாவில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் செவ்வாய்க்கிழமை (08) மாலை இரண்டாவது முறையாக சந்தித்தனர்.
60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு நிபந்தனை மீதமுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தது.
செவ்வாயன்று 5:00 EST (21:00 GMT) மணிக்குப் பிறகு நெதன்யாகு வெள்ளை மாளிகைக்கு நுழைந்து ட்ரம்புடன் சந்திப்பினை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவல்லை.
இந்த சந்திப்புக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை நெதன்யாகு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை சந்தித்தார்.
ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்குப் பின்னர், நெதன்யாகு அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது அரசுப் பயணமாக இது அமைந்துள்ளது.
இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் நெதன்யாகு, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை முடிந்ததாக நம்பவில்லை என்றும், ஆனால் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு போர் நிறுத்தத்திற்காக நிச்சயமாக செயல்பட்டு வரும் நிலையில், எங்கள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவில் உயிருடன் இருக்கும் 10 பணயக்கைதிகளின் விடுதலையும், இறந்த ஒன்பது பேரின் உடல்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேலிய பிரதமருக்கும் ட்ரம்பிற்குகம் இடையிலான சந்திப்பிற்கு முன்பு, ஒரு கட்டார் தூதுக்குழு வெள்ளை மாளிகைக்கு வந்து அதிகாரிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான அண்மைய சுற்று பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின்படி 2023 ஒக்டோபர் 7 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பணயக்கைதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலில் காசாவில் குறைந்தது 57,500 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.