இந்திய வீரர் உன்முக்த் சந்த் ஓய்வு
இந்திய வீரர் உன்முக்த் சந்த் 28. கடந்த 2012ல் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்ட இவர் 111 ரன் எடுத்து இந்தியாவுக்கு கோப்பை வென்று கொடுத்தார். 18 வயதில் ஐ.பி.எல்., அரங்கில் நுழைந்தார். டில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளில் களமிறங்கிய இவர் பெரியளவு சாதிக்கவில்லை. அதேநேரம் இந்திய ‘ஏ’ அணி கேப்டனாக, நியூசிலாந்து (2013), வங்கதேச (2015) ‘ஏ’ அணிகளை வென்றார்.
2016ல் மும்பை அணி இவரை கழற்றி விட்டது. ஏலத்திலும் யாரும் வாங்கவில்லை. 2019–20ல் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடியதும் (7 போட்டி, 195 ரன்) கைகொடுக்கவில்லை. தற்போது 28 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் உன்முக்த் சந்த். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘இந்தியாவுக்காக 19 வயது தொடரில் உலக கோப்பை வென்று தந்தது மிப்பெரிய தருணம். ‘ஏ’ அணி கேப்டனாக வென்ற பல கோப்பைகள் கைப்பற்றியது நினைவில் நிலைத்திருக்கும். கடந்த சில ஆண்டுகள் எதுவும் சரியாக அமையவில்லை. வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எனினும் மறக்க முடியாத தருணங்களுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். உலகம் முழுவதும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளேன்,’’ என்றார்.
அமெரிக்கா செல்கிறார்
உன்முக்த் சந்த் அடுத்து அமெரிக்க அணிக்காக விளையாட இருப்பதாக செய்திகள் வெளியாகின. தவிர, உலகின் பல பகுதிகளில் நடக்கும் லீக் தொடர்களிலும் விளையாட திட்டமிட்டுள்ளார்.