பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டுவாரா?

28.04.2024 09:32:03

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார், அதன்மூலம் ராஜபக்சக்களையும் அவர்களின் பொது வேட்பாளராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் வெல்ல வைப்பதற்காக அவர் மறைமுகமாக உதவுவார் என்ற ஒரு வாதம் சில அரசியல்வாதிகளினாலும்,யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்களிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது.ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களிலேயே அது தொடர்பாக எழுதப்படுகின்றது.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் இனவாதத்தை தூண்டுவாரா?அவர் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிச் செல்லும் வாக்குகளை கவர்வதன்மூலம்,அவரைத் தோற்கடித்து, அவருக்கு எதிராக நிற்கக்கூடிய மற்றொரு பிரதான சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் உள்நோக்கத்தோடு களம் இறக்கப்படுகின்றாரா?

இக் கேள்விக்கு விடையாக சில கேள்விகளையே திருப்பிக் கேட்கலாம்.சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது உறங்கு நிலையிலா உள்ளதா? அது இனிமேல்தான் தூண்டி விடப்படுவதால் விழித்தெழப்போகின்றதா ? .அப்படி என்றால் கிழக்கில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பது யார்? வெடுக்கு நாறி மலையில் மரபுரிமைச் சொத்துக்களை ஆக்கிரமிப்பது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டத்தை புதிய வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது யார்? இனப் பிரச்சினைக்கு தீர்வாக 13ஐக் கடக்க கூடாது என்று சிந்திப்பது யார் ?

2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறையும் அப்படியே உள்ளன.இனவாதம் உறங்கு நிலைக்குச் சென்று விட்டது என்று கூறும் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் ஒடுக்குமுறையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார் என்றுதான் ஏடுத்துக்கொள்ள வேண்டும். எனவே சிங்கள பவுத்த பெருந்தேசிய வாதத்தை இனிமேல்தான் ஒரு தமிழ் பொது வேட்பாளர் உசுப்பேத்த வேண்டும் என்பதல்ல.அது ஏற்கனவே ஆக்கிரமிப்பு மனோநிலையுடன் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.