“ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வெளியே வர வேண்டும்” .

27.01.2026 13:52:43

சென்னையில் உலக மகளிர் உச்சி மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-01-26) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர், “இன்றைக்கு இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு போகிற மாநிலமாக நம்முடைய தமிழ்நாடுதான் இருக்கிறது. புதிதாக எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்க முன் வந்தாலும் அதன் மூலமாக பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பது தான் நான் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். அதுதான் என்னுடைய வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இப்போது பல தனியார் நிறுவனங்களில் இத்தனை சதவீதம் பெண் தொழிலாளருக்கு இடம் இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால், பெண்கள் அதிகமாக வேலைக்கு போவதிலே நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் வெளியே வர வேண்டும். புதிது புதிதாக வளர்ந்து வரக்கூடிய துறைகளில் பெண்கள் இடம் பெற வேண்டும், உயர் பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும். அதற்காக தான் உலக வங்கியினுடைய உதவியுடன் ரூ.185 கோடியில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த இண்டு நாள் மாநாட்டில் விவாதிக்கப்படக்கூடிய கருத்துக்களும் அதனா; உருவாகப்போகிற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் நம்முடைய இலக்கை அடைய துணை நிற்கும் என்று நான் நம்புகிறேன்.

பெண்கள்தான் இந்த சமூகத்துடைய முதுகெலும்பு. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடியாது. தந்தை பெரியார் நூற்றாண்டுகளுக்கு முன்னேயே வெளியுறுத்தின கருத்து இது. அவருடைய வழியை பின்பற்றி முத்தமிழறிஞர் கலைஞர் பெண்களுடைய முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, காவல் துறையில் பெண் காவலர்கள், கிராமப்புற பெண்களும் மேன்மை அடைவதற்கு அடித்தளமான மகளிர் சுய உதவி குழுக்கள், அரசியல் பங்கேற்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு என நீண்ட பட்டியலை போட முடியும். அடுத்து இப்போது திராவிட மாடல் அரசிலும் பெண்களுடைய சம பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று இதுவரை இல்லாத அளவுக்கு பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

முழுக்க முழுக்க நம்ம திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களுடைய ஒத்து போகக்கூடிய குறிக்கோள்களை இந்த தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் கொண்டிருக்கிறது. ஆண் பெண் இடையிலான பாலின இடைவெளியை குறைத்தால் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று ஐஎம்எப் அமைப்பு சொல்கிறது. நாங்களும் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு என்ற எங்கள் இலக்கை அடைய பெண்கள் தான் முக்கிய பங்கு வைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்க, ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாக வாழ, பெண்கள் மரியாதையான ஊதியத்தை பெற்றிட, பெண்கள் தொழில் முனைவர்களாக மாற, பெண்கள் எந்தவித அச்சம் இல்லாமல் வாழ எனது தலைமையிலான உங்கள் திராவிட மாடல் அரசானது உரிய கட்டமைப்பை உருவாக்கும். அதற்காக தொடர்ந்து உழைக்கும்” என்று கூறினார்.