2026 தீபாவளியை முன்னிட்டு சூர்யாவின் சீன் , நயன்தாராவின்  மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபீஸ் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதை ரசிகர்கள் எப்போதுமே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், நவம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகத் தயாராகி வருகின்றன. குறிப்பாக சூர்யாவின்  சீன் , நயன்தாராவின்  மூக்குத்தி அம்மன் 2 , விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி ,  ஆகிய திரைப்படங்கள் தீபாவளி வெளியீட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இந்தியில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. 

1. சூர்யாவின் சீன் 

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  சீன் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மலையாளத்தில்  ரோமாஞ்சம் , ஆவேஷம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நஸ்லென், ஆனந்தராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன், நகைச்சுவை, கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்படாமல் போன ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் சிக்குகிறார். அந்த வழக்கை ஒரு வித்தியாசமான குழுவுடன் சேர்ந்து எப்படி விசாரிக்கிறார் என்பதே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.  ஏற்கெனவே  கருப்பு ,  விஸ்வநாத் அண்ட் சன்ஸ்  படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் சீன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 2. நயன்தாராவின்  மூக்குத்தி அம்மன் 2 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  மூக்குத்தி அம்மன் 2  திரைப்படமும் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான  மூக்குத்தி அம்மன்  திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஆனால், இந்த முறை இயக்குநர் சுந்தர்.சி படத்தை இயக்கியுள்ளார்.

நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் குஷ்பு சுந்தர், விக்னேஷ் சிவன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் ஆன்மிகம், பிரமாண்டமான காட்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

ரைஸ் ஆஃப் மகாசக்தி  என்ற பெயரில் வெளியான டீசர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நயன்தாராவின் தெய்வீகத் தோற்றமும், சுந்தர்.சியின் இயக்கமும் இந்தப் படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. 

 3. விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள  அப்பா குட்டி  திரைப்படமும் தீபாவளி வெளியீட்டுப் போட்டியில் முதலில் இடம்பெற்றிருந்தது. இரவுக்கு ஆயிரம் கண்கள் ,  கண்ணை நம்பாதே  போன்ற படங்களை இயக்கிய மு.மாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் பிரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன், பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், குடும்ப சென்டிமென்ட், திரில்லர் அம்சங்களுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்தில் நடிப்பதுடன் இசையமைப்பு, படத்தொகுப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

முதலில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக இருந்த படம் நவம்பர் 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், அக்டோபர் 31ஆம் தேதி வெளியான புதிய திரைப்படப் பட்டியலில் ‘அப்பா குட்டி’ நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய தகவலின்படி இது தீபாவளி நேரடி வெளியீடாக இருக்காது. 

4.  ராமாயணா 

தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்தியில் உருவாகியுள்ள பிரமாண்டமான ‘ராமாயணா’ திரைப்படமும் இந்த தீபாவளிக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களில் ஒன்றாக உள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்திய இதிகாசமான ராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமான திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக சாய் பல்லவி நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்களிடையேயும் இந்தப் படத்திற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் போட்டியில்  சீன் ,  மூக்குத்தி அம்மன் 2  ஆகிய இரண்டு படங்களுக்கிடையே நேரடிப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்து, ஜித்து மாதவனின் வித்தியாசமான இயக்கம், நஸ்ரியாவின் வருகை ஆகியவை சீன்  படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. மறுபுறம் நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரம், சுந்தர்.சியின் இயக்கம், பிரமாண்டமான தயாரிப்பு ஆகியவை  மூக்குத்தி அம்மன் 2  படத்திற்கு சாதகமாக அமையலாம்.

மேலும் தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் காலை 6 மணி முதல் காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் தீபாவளிப் படங்களின் வசூல் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.