ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதியின் முடிவு.

09.10.2026 15:43:28

கலகொடஅத்தே ஞானசார தேரரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர், எமது மகா சங்க சபையுடன் கலந்துரையாடுவதுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திகதியொன்றையும் நேரமொன்றையும் வழங்க வேண்டும் என மகா விஹாரவம்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் பிரதான பதிவாளரும், அக்கமகா பண்டித, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கோட்டபிட்டியே ராகுல அனுநாயக்க மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்ககை விடுத்துள்ளார்.

 

மகா விஹாரவம்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபை சாகித்திய சக்கரவர்த்தி, அக்கமகா பண்டித, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர், பிரதான பதிவாளர் கலாநிதி கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க மகாநாயக்க தேரரரினால் நேற்று (09) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமை குறித்து புதிதாக விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என நாம் நம்புகின்றோம். தேரர் காவி ஆடை அணியாமல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பான எமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் பிரதியொன்றை அனுப்பி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தோம்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் எமது மகா விஹாரவம்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையைச் சேர்ந்த பிக்குவாவார். எனவே, அவர் காவி ஆடை அணிவதா அல்லது அதனை அகற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் அவர் சார்ந்துள்ள எமது மகா சங்க சபைக்கே உரித்தானதாகும்.

இவ்வாறான நிலையில், எமது மகா சங்க சபையைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைக்காமல், நேற்று (8) நாயக்க தேரர்கள் குழுவொன்றுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். இது எமக்கு ஆச்சரியமளித்தது.

எவ்வாறாயினும், ஞானசார தேரர் தொடர்பான இந்தப் பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்படவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த விவகாரம் எமது மகா சங்க சபையை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் பௌத்த சமூகத்தையும் பாதித்துள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதுக்கு எமது மகா சங்க சபை விரும்புகின்றது. ஞானசார தேரரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர், எமக்கு உரிய திகதியையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும்.

அத்துடன், குறித்த கலந்துரையாடலுக்கு ஸ்ரீ மங்கள உபோசதகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தையும் அழைத்துக்கொள்ளுமாறு, அதிமேதகு மகாநாயக்க தேரர்களின் அனுமதியுடன் ஜனாதிபதியிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.