இலங்கைக்கு வெளியுறவுத் கொள்கை என்று எதுவுமே இல்லை!
|
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சிறந்ததா இல்லையா என்பது தற்போது பிரச்சினையல்ல. எந்தவொரு தெளிவான வெளியுறவுக் கொள்கையும் இல்லாமல் காற்றிலும் அலையிலும் அடித்துச் செல்லப்படும் நிலையே உள்ளது. இன்று இலங்கைக்கு வெளியுறவுத் கொள்கை என்று எதுவுமே இல்லை என்பதே கசப்பான உண்மையாகும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
|
மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை மோதலில் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான முறையில் தலையிட்டார். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்தவொரு பொறுப்புணர்வும் இல்லை என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டார். கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பாக இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் சூழல் மிகவும் தனித்துவமானது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு எக்காலத்திலும் இல்லாத வகையில் இணையற்ற சில சம்பவங்கள் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1948 ஆம் ஆண்டின் பின்னர், எந்தவொரு நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள்ளும் ஒரு போர்க்கப்பலோ அல்லது வேறு எந்தவொரு கப்பலோ தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில்லை. இரண்டாம் உலகப் போர் முடிவிற்குப் பின் இது நடந்ததே இல்லை. ஆனால் அது இப்போது நிகழ்ந்திருக்கிறது, அதுவும் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள்ளேயே நடந்திருக்கிறது. அது பிரத்தியேக பொருளாதார மண்டலம் மட்டுமல்ல, உண்மையில் இலங்கையின் கடல் எல்லையை அண்மித்த பகுதியுமாகும். அதாவது தெற்குக் கடற்கரையிலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் திட்டமிட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக குறைந்தது 106 மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கை சில மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு கட்டாயக் கடமையாகும். இது ஏதோ ஒரு பெரிய கருணைச் செயலோ அல்லது தாராள மனப்பான்மையோ அல்ல. சர்வதேச சட்டத்தின்படி இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு கடப்பாடாகும். எனவே, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழான கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தவிர அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எதையும் செய்யவில்லை. மாறாக இந்த தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிடவில்லை. இவ்வாறு அரசாங்கம் மௌனம் காப்பதை எந்த வகையிலும் பாதுகாக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள நமது நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் உடனடியான மற்றும் தீர்க்கமான பாதிப்பை ஏற்படுத்தும். இச்சம்பவம் இலங்கையின் உயிர்நாடியான ஏற்றுமதியில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நம் நாட்டுக்கு மிக அருகில் நிலவும் இந்த பதற்ற நிலைமை காரணமாக பெருமளவான கப்பல்கள் எமது துறைமுகத்தை தவிர்த்துச் செல்லும் அபாயம் உள்ளது. இவ்வாறான எதிர்கால பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் அமைதியாக இருக்கின்றமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். குறிப்பாக இலங்கையின் முக்கிய பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் ஏதுவான ஒரு நிறுவனம் அரசிடம் இருக்கும்போது இந்த மௌனம் கண்டிக்கத்தக்கது. இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, மொரிஷியஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பு நமது கடற்பரப்பைச் சுற்றி அமைதி, நிம்மதி மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டதாகும். இலங்கை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும், தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக தொடர்பு அற்றதாகவோ, விலகி இருப்பவராகவோ அல்லது நழுவிச் செல்பவராகவோ இருக்க முடியாது. நாம் உறுப்பினராக இருக்கும் இந்த அமைப்பைக் கூட்டுவதற்கு இலங்கை முன்முயற்சி எடுக்க வேண்டும், மேலும் நம்மைச் சுற்றியுள்ள சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். மேற்கு இந்தியப் பெருங்கடலில் நிலவும் பெரும் வல்லரசுப் போட்டி மற்றும் வன்முறையினால் ஏற்படும் பதற்றங்கள் வங்காள விரிகுடாவிற்குப் பரவாமல் தடுப்பதற்கு ஏற்ற ஒரு அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது. அவ்வாறு பரவினால் அது இந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் செழிப்பு, நல்வாழ்வில் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இலங்கை இதில் சிறிதும் தலையிடாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஒரே ஒரு பிரச்சனைதான், அது அரசியல் விருப்பம் மற்றும் உறுதியின்மை மட்டுமே. சர்வதேச விவகாரங்களில் இந்த நாடு அடைந்திருந்த உயர்ந்த நிலை மற்றும் கௌரவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு பேரழிவாகும். முந்தைய தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையால் இந்நாடு வழிநடத்தப்பட்டது. 1962 ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை மோதலில் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான முறையில் தலையிட்டார். அவர் இந்தியாவுக்கும் பெய்ஜிங்கிற்கும் ஒரு தூதுவரை அனுப்பினார். அன்றைய வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக இருந்த எனது தந்தைதான் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கடிதத்தை டெல்லியில் ஜவஹர்லால் நேருவிடமும் பெய்ஜிங்கில் பிரதமர் சூ என்லாயிடமும் நேரில் கொண்டு சென்று சேர்த்தார். அந்த காலத்தில் உலக நாடுகளால் நாம் அவ்வாறுதான் மதிக்கப்பட்டோம். இரண்டாம் உலகப் போரின் முடிவில் சான் பிரான்சிஸ்கோவில் ஆற்றிய புகழ்பெற்ற உரையில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன, வெற்றி பெற்ற நாடுகள் தோல்வியுற்றவர்கள் மீது பழிவாங்க வேண்டாம் என்றும், ஜப்பான் மீண்டும் எழுந்து உலக சபைகளில் ஒரு முதன்மையான நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த நேரத்தில் இலங்கைக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளைத் துறந்த அந்தப் பெருந்தன்மையான செயலை ஜப்பான் இன்றுவரை மறக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச குடியிருப்பு தினத்தை அங்கீகரிப்பதற்குக் காரணமாக இருந்தார், இது தங்குமிடம் மற்றும் வீடமைப்பை மக்களின் பிரிக்க முடியாத பொருளாதார உரிமையாகக் கவனத்தில் கொள்ளச் செய்தது. 2023 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவது குறித்தும், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் பின்பற்றும் பாதை குறித்தும் உலகிற்கு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார். இலங்கையர்களாக நாம் பெருமிதம் கொள்ளும் நமது வரலாறு அதுதான். ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சிறந்ததா இல்லையா என்பது இங்கு கேள்வியல்ல, எந்தவொரு தெளிவான வெளியுறவுக் கொள்கையும் இல்லாமல் காற்றிலும் அலையிலும் அடித்துச் செல்லப்படும் நிலையே உள்ளது. கசப்பான உண்மை என்னவென்றால், இன்று இலங்கைக்கு வெளியுறவுத் கொள்கை என்று எதுவுமே இல்லை என்றார். |