நீதிமன்ற சுதந்திரம்!

14.05.2026 15:00:00

நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் ஆதிக்கத்திலிருந்து நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதே ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாகும். தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் திட்டமிட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மக்களின் கௌரவத்தையும் நீதிமன்றச் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தவறும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சியாக உறுதியுடன் களமிறங்குவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மே முதலாம் திகதி நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் நீதிபதிகளின் கண்ணியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, ஜனாதிபதி சட்டத்தின் சமத்துவம் பற்றி பேசுகின்றார். நாட்டு மக்கள் ஒன்றும் தெரியாத ஏமாளிகள் அல்ல, படித்தவர்களும் இருக்கின்றனர். எனவே ஜனாதிபதியிடம் போலியான உபதேசங்களை வழங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவு டில்வின் சில்வாவுக்குத் தெரியும். மேல் நீதிமன்றத் தீர்ப்புகளின் முடிவுகளை ஜனாதிபதி அறிவார். நீதிமன்றம், சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை ஆகிய மூன்றையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமாகும். அதைத்தான் அதிகாரப் பகிர்வு என்று கூறுகிறோம்.

அவற்றின் சுயாதீனத் தன்மையில் கை வைத்தால் அது பெரும்பான்மையையும் சவாலுக்குட்படுத்தும். கோட்டாபய ராஜபக்சவிடமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது, ஆனால் இறுதியில் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் போனதுடன், கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த நாட்டில் வாழவும் முடியாமல் போனது. அதனால் பாராளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டு அனைத்தையும் செய்துவிடலாம் என்று நினைத்தால், அல்லது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியைக் கொண்டு அனைத்தையும் செய்ய முடியும் என்று நினைத்தால், அது ஒரு வரலாற்றுத் தவறாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம், சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது, நான் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்துகிறேன் என்று கூறுகின்றார். ஆனால் அவ்வாறு கூறும் ஜனாதிபதி, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து நீதிபதிகளுடன் கலந்துரையாடுகிறார். இனிமேல் வழங்கப்படவிருக்கும் தீர்ப்புகளின் இறுதி முடிவுகள் குறித்து முன்கூட்டியே கூறுகிறார்.

அதேபோல் திட்டமிட்ட முறையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமன்றி, அவருடைய கட்சியின் செயலாளரான டில்வின் சில்வா, மூன்று நீதிபதிகளைக் கொண்ட நிலக்கரி ஆணைக்குழு எதிர்காலத்தில் வழங்கவுள்ள தீர்ப்பை, இன்னும் மூன்று மாதங்களுக்குள் வழங்குவார் என்றும், முன்னாள் வலுசக்தி அமைச்சர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்தத் தீர்ப்பு குறித்த முடிவை முன்கூட்டியே கூறுகிறார்.

நிறைவேற்றுத்துறையோ அல்லது சட்டவாக்கத்துறையோ நீதிமன்றத்தின் மீது செல்வாக்கு செலுத்தக் கூடாது என்றும், அவற்றின் செயல்பாடுகளில் சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்றும்தான் சட்டம் கற்பிக்கிறது. ஜனநாயக வரலாற்றில் சட்டத்தின் ஆட்சி என்ற கருத்து இப்படித்தான் வளர்ச்சியடைந்தது. அப்படி இருக்கும்போது, மே மாதத்தில் திட்டமிட்ட முறையில் கட்சியின் செயலாளர் நிலக்கரி ஆணைக்குழுவின் தீர்ப்பைக் காலக்கெடுவுடன் பிரகடனப்படுத்துகிறார். ஜனாதிபதி மேல் நீதிமன்றத் தீர்ப்புகளைக் காலக்கெடுவுடன், திகதியுடன் சேர்த்துத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கான பிரேரணையைக் கோரினோம். ஆனால் வழக்கம்போல பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அந்தச் சபை ஒத்திவைப்பு பிரேரணை நிராகரிக்கப்பட்டது. அதாவது நீதிமன்றச் சுதந்திரம் குறித்த இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதிக்கக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. நாட்டு மக்களின் கௌரவத்தையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை அவர்கள் தட்டிக்கழித்தால், நாம் எதிர்க்கட்சியாக அதற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிச்சயமாகச் செயல்படுவோம் என்றார்