வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க கூடாது!

27.10.2026 08:55:08

மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

  

கொழும்பில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

டொலர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அரசாங்கம் வழங்கும் மானியங்கள் அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தமது சொந்த டொலர்களைக் கொண்டுவந்து முதலீடு செய்து இலாபம் ஈட்டுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நாட்டின் தேசிய வளமான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைப் பலவீனப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பது தவறாகும்.

மக்களின் வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணப் புழக்கமின்மை மற்றும் வருமானமின்மை காரணமாக பொதுமக்கள் தங்களது சொத்துக்களை அடகு வைப்பது கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.தீவுகள் ஆராயுங்கள்

அதேபோல், எதிர்கால வருமானத்தை நம்பி இன்றைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மக்கள் கடன் அட்டை கடன்களையும், குத்தகை முறைகளையும் அதிகளவில் நாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான பொருளாதாரப் போக்காகும்.

நாட்டின் பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையிலேயே உள்ளது என சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, அரசாங்கம் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இலங்கையின் சுயாதீனத்தையும் மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் திறம்படச் செயல்பட வேண்டும். வெறுமனே வரிகளை உயர்த்துவதை விட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே தற்போதைய தேவையாகும் என்றார்.