இரண்டு வழிகளில் விசா மோசடி!

24.07.2026 14:07:00

இலங்கையில் இரண்டு வழிமுறைகளில் விசா மோசடிகள் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளான கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புக்களுடனான வீசாவினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து நிதி பெற்றுக்கொள்ளப்பட்டு மோசடிகள் இடம்பெறுவதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட தொழிலுக்கு பதிலாக ஏனைய தொழில்கள் வழங்கப்பட்டு மோசடிகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான மோசடிகளுக்கு பல உதாரணங்களை குறிப்பிடலாம், ஆசிப் தொழில் முகவர் நிறுவனம் 1500 சவூதி ரியால் சம்பளம் என்று குறிப்பிட்டு 100 பேரை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு சென்றவுடன் அவர்களுக்கு 400 ரியால் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீண்டும் நாட்டுக்கு வர முடியாமல் நிர்கதியான நிலையில் காணப்படுகின்றனர். இது போன்றவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களாகும்.

அதுமாத்திரமின்றி விமான நிலையத்திலும் மிக மோசமான வலைப்பின்னலுடான மோசடிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக ஐரோப்பா,கனடா ஆகிய நாடுகளுக்கு எவரேனும் செல்லும் போது விமான நிலையத்தில் ஒரு தரப்பினரால் காசு கேட்கப்படுகிறது.

அங்கு கேட்கப்படும் காசை கொடுக்காவிட்டால் 'இந்த விசாவில் எமக்கு சந்தேகம் உள்ளது' என்று குறிப்பிட்டு அவர்கள் திருப்பியனுப்படுகிறார்கள்.

தூதரகம் சென்று விசா குறித்து மீண்டும் ஆராய்வதை காட்டிலும் கேட்கும் காசை கொடுத்து விட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறான சம்பவங்கள் குறித்து என்னிடம் பலர் நேரடியாக முறைப்பாடளித்துள்ளார்கள்.

நிதி மோசடி தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்கும் போது பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழும்புக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

எமது பிரதேசங்களின் இளைஞர்கள் பலர் இன்று கனடா, ஐரோப்பியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்காக பலரிடம் காசு கொடுத்து ஏமாற்றமடைந்து இன்று கோடிக்கணக்கில் கடனாளியாகியுள்ளார்கள்.

மட்டக்களப்பில் உள்ள ஒருவர் கொழும்பில் உள்ள முகவர் நிலையத்துக்கு நிதி வழங்கி ஏமாற்றமடைந்தால் அவர் கொழும்பில் வந்து முறைப்பாடளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

கொழும்புக்கு வந்தால் 4 ஆம் மாடிக்கு செல்லுங்கள், சி.ஐ.டி அல்லது நிதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு செல்லுங்கள் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இதனால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இந்த பிரச்சினைகளை ஆராய பொலிஸ் நிலையத்தில் விசேட பிரிவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.