அழுத்தம் கொடுக்கிறார் ஜனாதிபதி!

01.04.2025 08:26:22

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிபதிகளை விமர்சித்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழுத்தம் பிரயோகித்துள்ளார். எனது வழக்கு விவகாரத்திலும் பதவிக்கான கௌரத்தை மீறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சித்துள்ளார். நீதிமன்ற விவகாரத்தில் ஜனாதிபதி முன்பிள்ளை பாடசாலை பிள்ளை போல் செயற்படுகிறார். ஆகவே ஜனாதிபதி சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 29 ஆம் திகதி மாத்தறை பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் 'நாங்கள் வழக்குத் தாக்கல் செய்யும் போது ஒருசில நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறார்கள்.

இது அந்தளவுக்கு நல்லதல்ல, வழக்கு விசாரணைகளுக்காகவே நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் குறித்த ஒரு வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த இரண்டு நீதிபதிகளின் சுயாதீனம் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்வியெழுப்பயதை தொடர்பில் அந்த இரண்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்கள். சுயாதீனம் தொடர்பில் கேள்வியெழுப்பப்படும் போது நீதிபதிகள் சுய விருப்பத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணைகளில் இருந்து விலகலாம்.

இதற்கு சட்டத்தின் ஊடாகவே நீதிபதிகளுக்கு உரித்து வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நீதிபதிகளை கேள்வியெழுப்புவதை விடுத்து தமது கட்சி உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பற்றி அவதானம் செலுத்துவது பொருத்தமானதாக அமையும். நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஒரு வழக்கு பற்றி பகிரங்கமாக பேசுவது முறையற்றது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நீதிபதிகள் பற்றி ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைப்பது நீதிமன்றத்துக்கு இழைக்கும் நேரடியான அழுத்தமாகும்.

நீதிபதி ஒருவரை பதவியில் இருந்து நீக்கும் சந்தர்ப்பத்தை தவிர்த்து ஏனைய சந்தர்ப்பங்களில் நீதிபதிகளையோ அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ஏதேனும் வழக்கினையோ பற்றி பாராளுமன்றத்துக்குள் பேசுவதற்கும் எவருக்கும் அதிகாரமில்லை.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாப்பதற்காகவே விசேட ஏற்பாடுகள் பல இயற்றப்பட்டுள்ளன.இந்த சுயாதீனத்தின் மீதே ஜனாதிபதி தற்போது கைவைத்துள்ளார்.

எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தான் விரும்பும் தீர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சித்துள்ளார். எனது வழக்கு கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த ஜனவரி மாதம் மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி எனது வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு பெப்ரவரி மாதம் நீதிமன்றம் நற்செய்தியொன்றை வெளியிடவுள்ளது என்றார்.

நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் பகிரங்கமாக தமது நிலைப்பாட்டை குறிப்பிடும் உரிமை ஜனாதிபதிக்கோ அல்லது பிச்சைக்காரனுக்கோ கிடையாது.மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிக்கிறார். ஆகவே நீதிமன்ற வழக்குகள் குறித்து இவ்வாறு பேசுவது பாரதூரமானது.

எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முறையே ஜனாதிபதி பதவியை வகித்தார்கள். எவரும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தலையிடவில்லை. தமது பதவிக்கான கௌரவத்தை பாதுகாத்துக் கொண்டு செயற்பட்டார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிமன்ற விவகாரத்தில் முன்பிள்ளை பாடசாலை பிள்ளை போல் நடந்துக் கொள்கிறார். இவருக்கு சட்டம் தொடர்பில் தெரியாமல் இருக்க வேண்டும். அல்லது தெரிந்தும் முறையற்ற வகையில் செயற்பட வேண்டும். ஆகவே ஜனாதிபதிக்கு சிறந்த சட்ட ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.