ஜனாதிபதியும் பிரதமரும் "தெளிவான பொய்களைக் கூறுகின்றனர்!

21.10.2026 15:00:00

ஜனாதிபதியும் பிரதமரும் சொல்லப்போகும் ஒரே பொய்யையாவது சரியாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டுவிதமான பொய்களைக் கூறி வருகின்றனர். இந்நாட்டை ஆட்சி செய்வது "தெளிவான பொய்களைக்" கூறும் அரசாங்கம் என்பது பாலர் வகுப்புச் சிறுவனுக்குக்கூடத் தெரியும். நாட்டு மக்கள் அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்றால், முடியுமானால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தொழிலாளர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி வீதிப் போராட்டம் நடத்தி அரச அதிகாரத்தைக் கைப்பற்றி, தற்போது அரசாங்கம் கனவுலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது. பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவும், அதிகரித்துள்ளது வறுமை என்பது பன்முக வறுமையாக மாறி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அழுத்தத்திற்குள்ளான நிலைமையே தற்சமயம் காணப்படுகின்றது. இது குறித்து அரசாங்கத்தின் பதில்கள் என்ன ?

உணவுகளின் விலை உயர்வு, போஷாக்குப் பிரச்சினைகள், போசாக்கு குறைபாடு அதிகரிப்பு ஆகியவற்றுக்கான தீர்வுகளை அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பள வருமானத்தின் கொள்வனவு திறன் மட்டம் வீழ்ச்சியடைந்து பெற்றுக்கொள்ள முடிந்த பொருட்களின் அளவு மட்டங்களும் இன்று குறைந்துபோயுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காத்திலும் மின்சாரக் கட்டணம் கூட்டப்படவுள்ளது. பொய்ப் பிரசார அரசியலின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசாங்கம், தாங்க முடியாத மின்சாரக் கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பதில்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் .

எரிவாயு விலை அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு மற்றும் நாளாந்த வாழ்க்கைச் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமைக்கு அரசாங்கத்தின் தீர்வுகளை முன்வைக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். தேயிலைத் தொழில் வீழ்ச்சியடைந்து, உற்பத்திச் செலவுகள் அதிகரித்து, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்கதிர்களை வாயில் கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று விவசாய சமூகம் அநாதரவாக்எப்பட்டுள்ளது. அவ்வாறே, நாட்டில் மருந்துத் தட்டுப்பாடும் வைத்திய உபகரணகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் மருந்தகங்களிலிருந்தும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் பதில்கள் என்ன?

அத்துடன், பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதற்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வுகள் யாது ? உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகக் குழந்தைகளுக்கு போசாக்குள்ள உணவை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிலைமை ஒன்று உருவானாலும் இந்த அரசாங்கத்திடம் அவற்றுக்கும் தீர்வுகள் இல்லை. பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டாலும், பொருளாதார வளர்ச்சி என்பது கோடீஸ்வரர்களுக்கே ஏற்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் தொடர்ந்து ஏற்பட்டு காணப்படுகின்றன. புத்திசாலிகளின் வெளியேற்றமும் கூட தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத பங்களிப்பை பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர். மக்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பும் சீர்குலைந்துபோயுள்ளன. வறுமையும் அழுத்தமும் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக நடுத்தர வர்க்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூக பிரிவினரும் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் பொருளாதாரம் மற்றும் சமூகப் பேரழிவை எதிர்கொண்டாலும் அரசாங்கத்திடம் இவற்றுக்கு உரிய தீர்வுகள் இல்லை என்றார்.