
தொழில் வாய்ப்பு திட்டங்களை அமுல்படுத்துங்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்போது பாலம் அமைக்கப்படும், அவ்வாறு அமைக்கப்பட்டால் அதனால் இலங்கைக்கு கிடைக்கும் சாதகமான பலன்கள் என்ன இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் என்ன? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரியாணி உட்பட சாப்பாட்டு கடைகளை திறப்பதால் இளைஞர்களுக்கு நிலையான தொழில்கள் கிடைக்காது. சிறந்த தொழில் வாய்ப்பு திட்டங்களை அமுல்படுத்துங்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். |
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த நாட்டில் முதுகெலும்பாக இருந்த விவசாயத்துறை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு காலத்தில் இலங்கையின் கைத்தொழில்துறையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து அதனை எரிபொருளாக சுத்திகரித்து ஏற்றுமதி செய்து அதன்மூலம் வருமானத்தை பெற்றுக்கொண்ட நாடாகும். அதேபோன்று துணிகளை இறக்குமதி செய்து தைத்த ஆடை ஏற்றுமதியில் பொருளாதாரத்தை ஈட்டிய நாடாகும். ஆனால் இந்தத் துறைகள் மெல்ல மெல்ல வீழ்ச்சியின் போக்கிலேயே இருக்கின்றது. குறிப்பாக வடக்கு மற்றகிழக்கில் இருந்த பல தொழிற்சாலைகள் இயங்காமல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தான் 13 பிளஸை தாண்டி இந்த நாட்டில் தீர்வொன்றை வழங்கப் போவதாக கூறினார். ஆனால் அவ்வாறாக தீர்வையும் கொடுக்கவில்லை. அவர் காலத்தில் அழிந்த கைத்தொழில் துறைகளையோ, பொருளாதாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவோ முனையவில்லை. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இப்போதும் மூடப்பட்டு அங்கிருந்த இரும்புகள் களவாடப்பட்டு சீமெந்து அத்திவாரங்கள் மட்டுமே உள்ளன. அவ்விடத்தில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்க வசதிகளைக்கூட உருவாக்கவில்லை. பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஒருகாலத்தில் ஆசியாவில் பிரபல்யமான தொழிற்சாலையாகும். இப்போது அவ்விடத்தில் தொழில் பேட்டையை உருவாக்குவதாக இந்த அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. 2015ஆம் ஆண்டில் அரசாங்கத்துடன் சில விடயங்களில் இணைந்துப்போன காலத்தில் இந்தப் பிரேரணையை கிளிநொச்சியில் நாங்கள் முன்வைத்திருந்தோம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் பரந்தனில் கைத்தொழில் பேட்டையை உருவாக்க வேண்டியதன் காரணத்தை முன்வைத்திருந்தோம். ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இருக்கவில்லை. இவ்விடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹதுன்நெதியிடம் குறிப்பிடுவதானது, நீங்கள் வடக்கு மற்றம் கிழக்கில் அழிந்து போயுள்ள கைத்தொழிற்சாலைகளுக்குரிய கருத்திட்டத்தை கையில் எடுங்கள். அந்தந்த மாவட்ட அரச அதிபர்கள் ஊடாக காணி, மூலப்பொருட்கள் அதற்கான நிதி தொடர்பான என்ற விடயங்களை எடுங்கள். அதேபோன்று இலங்கையில் தரமான உப்பை உற்பத்தி செய்த ஆனையிறவு மற்றும் குறிஞ்சா தீவு உப்பளங்கள் இருந்தன. ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மன்னாருக்கு போய் மாந்தை உப்பாகவே வெளிவருகின்றது. ஆனால் வெள்ளை உப்புக்கு பெயர்போன ஆசியாவில் மிகவும் தரம்வாய்ந்த உப்பு தொழிற்சாலையான குறிஞ்சாத்தீவு உப்பளம் இப்போதும் இயங்காமல் இருக்கின்றது. இவ்வளவு காலமும் கண்ணிவெடிகளை காரணம் கூறினர். இந்த இடத்திற்கு நான் நேரடியாக சென்று அதனை கம்பனியொன்றின் ஊடாக கொண்டுவர முயற்சித்ததுடன் இந்திய தூதரகத்துடன் கதைத்தேன். இந்திய தூதரகம் அதற்கான சார்பு நிலைகளை கொண்டிருந்தது. இப்போதும் இந்திய தூதரகம் மற்றும் யாழ். துணைதூதரகம் என்பன குறிஞ்சாத்தீவு உப்பளத்தை எடுத்துச் செய்ய சாதகமாக செய்தியை கூறுகின்றனர். அந்த அனுகுமுறையை கையாளுங்கள். அதன்மூலம் இரண்டாயிரம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான மிகப்பெரிய களமாகும். அத்துடன் ஒட்டிச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை விடுதலைப் புலிகள் ஆட்சிக் காலத்தில் மிகவும் திறமாக இயங்கியது. தமிழீழம் என்று பொறிக்கப்பட்ட ஓட்டின் தரம் எவ்வாறு இருந்தது என்பதனை இப்போதும் பார்க்கலாம். விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்த பொருண்மிய அறிவு மிக பெரியளவில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை இயங்குவதற்கு 2015 -2019 நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று வரவழைக்கப்பட்டு மூவாயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு செய்ய முன்வந்த போதும் அப்போதிருந்த அரசாங்கத்தில் இருந்த சிலர் அதனை தடுத்துவிட்டனர். இவ்வாறான காகிதத் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலை,உப்பளங்கள் இயங்கவில்லை,காங்கேசன்துறை தொழிற்சாலை இயங்கவில்லை. இப்படி இருக்கையில் எப்படி இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியும். இளைஞர்கள் எப்படி விருப்பத்துடன் இங்கு இருப்பர். நாங்கள் முதலில் உற்பத்தி ரீதியில் வளர வேண்டிய நாடு கைத்தொழில்துறை மேலோங்கி வர வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்போது பாலம் அமைக்கப்படும், அவ்வாறு அமைக்கப்பட்டால் அதனால் இலங்கைக்கும் கிடைக்கும் சாதகமான பலன்கள் என்ன இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் என்ன, இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை உற்பத்தியில் இருந்து வெளியேறியுள்ளது. ஆகவே அபிவிருத்தி திட்டங்களை பிற்போடாதீர்கள். அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகால திட்டங்களே எடுத்த காலப்பகுதியை தீர்மானிக்கும். சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். இப்போது யாழ்ப்பாணத்தில் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு புரியாணி மற்றும் சாப்பாட்டுக் கடைகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு சுற்றுலாப் பயணிகளுக்கு சாப்பாடு கொடுக்க புரியாணி கடைகள் திறக்கப்படுகின்றனவே தவிர, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் உள்ள இளைஞர்களுக்கான வேலைக்கான தளம் எங்கே திறக்கப்படுகின்றது. சாப்பாட்டுக் கடைகளால் வேலை கிடைக்குமா, உற்பத்தித்துறை, வேலை வாய்ப்புக்கான தளங்கள் தள்ளிப் போகின்றன. உங்களின் ஐந்தாண்டுகளில் செய்யும் ஆட்சியே அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும், இதற்கான உங்களின் முன்னேற்றமான முயற்சிகளுக்கு எங்களின் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருக்கின்றோம். இந்த தொழிற்சாலைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துங்கள் என்றார். |