தமிழ்நாடு முழுவதும் ரயில் சேவைகளில் மாற்றம்!

05.09.2026 08:40:02

தென்னக ரயில்வே, ரயில் சேவையில் மாற்றங்களை செய்திருக்கிறது. பொறியியல் பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சில ரயில்கள் தாமதமாக புறப்படும் என்றும், சரியான நேரத்திற்கு புறப்பட்டு செல்லும் ரயில்களில் சில, பயணத்திற்கு நடுவே குறிப்பிட்ட நேரத்திற்கு காத்திருப்பில் இருக்க வைக்கப்பட்டு, லேட்டாக போய் சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் விடுத்திருக்கும் அறிவிப்பில், "பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு-திருச்சி விரைவு ரயில் (16844) செப்.8ம் தேதி பாலக்காடு-புகழூர் இடையே மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் புகழூர்-திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும். அதேபோல நாகர்கோவில்-கச்சகுடா வாராந்திர விரைவு ரயிலில்(16354) வழித்தட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில் செப்.5ம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

அதேபோல திருச்சி-மயிலாடுதுறை மெமு ரயில் (16834) சேவையில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செப்.5,8ம் தேதிகளில் ஆலக்குடியில் 30 நிமிடங்கள் தாமதமாக நின்று செல்லும். சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயிலானது (16127) செப்.7ம் தேதி 20 நிமிடங்களும், 5,8ம் தேதிகளில் 50 நிமிடங்கள் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயில் (16187) செப்.8ம் தேதி 10 நிமிடங்களும், 10ம் தேதி 80 நிமிடங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் தங்களின் பயணங்களுக்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளளப்பட்டிருக்கின்றனர்.