பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வாரச்சந்தையில் குவிந்த மண்பாண்ட பொருட்கள்
செய்துங்கநல்லூரில் வாரச்சந்தை நடந்தது. இந்த சந்தையில் பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்ட பொருள்கள் விற்பனைக்கு வந்தது.
இந்த பொருள்களில் சட்டி, உலைமூடி, பானை, அடுப்பு, அடுப்பு கட்டி உள்பட பல பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை. சந்தையில் அடுப்பு ரூ.150 , பானை ரூ. 200, சட்டி ரூ. 100, அண்டைகட்டி மூன்றுக்கு ரூ. 300, என விற்று வருகிறார்கள்.
கடந்த வருடம் விற்றது போல இந்த ஆண்டு வியாபாரம் இல்லை. மிகக்குறைவாகவே பொருள் விற்று வருகிறது. இதுகுறித்து மண்பாண்ட வியாபாரி பேச்சியம்மாள் கூறியதாவது:-
செய்துங்கநல்லூரில் மண்பாண்ட தயாரிப்பாளர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொழில் செய்து வந்தோம். பொங்கல் நேரங்களில் மூன்று இடங்களில் சூளை வைத்து விடுவார்கள். ஆனால் தற்போது மண்பாண்ட மோகம் குறைந்தது. மூலப்பொருள் எடுக்க தடை உள்பட பல பிரச்சனைகளால் இந்த தொழில் மிகவும் நசிந்து வருகிறது.
கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் மண்பாண்டம் வியாபாரம் ஓரளவு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு வியாபாரம் மிக மந்தமாக உள்ளது. பலர் பொருள் பற்றி கேட்டு செல்கிறார்கள். ஆனால் வாங்கவில்லை. காலையில் இருந்து 10 பொருள் கூட விற்கவில்லை. ஆனாலும் பொங்கலுங்கு மேலும் சில நாட்கள் உள்ளன. எனவே செய்துங்கநல்லூர் சந்தை பொங்கலுக்கு என மீண்டும் கூடவுள்ளது. அந்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்த்த படி நாங்கள் உருவாக்கிய பொருள் விற்கப்படும் என நம்புகிறேன் என்றார்.
சமையல், உள்பட நலன் தரும் தன்மை மண்பாண்ட பொருள் மூலம் மக்களுக்கு கிடைக்கிறது. ஆயினும் மண்பாண்ட தொழிலாளிகளை உற்சாகப்படுத்த பொங்கலுக்கு அனைவரும் இந்த பொருள்களை வாங்கி பயனடைய வேண்டும் என மண்பாண்ட தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.