நாட்டை விட்டு வெளியேறிய மூன்று இலட்சம் இலங்கையர்கள்
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 299,934 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த வரி விதிப்பினால் நாட்டை விட்டு வெளியேறுவோர் தொகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளுக்கு செல்வோர் தொகை அதிகரிப்பு
தமது குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு படையெடுக்கும் இளைஞர்கள் மற்றும் வீட்டு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் தொகையும் கணிசமான வகையில் உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட 6,000 க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
டொலரின் வருகையில் வீழ்ச்சி
அந்த வகையில் 2022 டிசம்பரில் மட்டும் மொத்தமாக 23,407 பேர் வெளிநாட்டு வேலைக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் வீட்டுப் பணியாளர்கள் 73,781 பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, 2022 இல், வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2021 இல் 5,491 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.