குற்றவியல் திணைக்களத்தில் முன்னிலையாகாத ஜோன்ஸ்டன் !

21.05.2022 09:25:13

காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் மாத்திரமே வாக்குமூலத்தை பெற வேண்டியுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய சகலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுகயீனம் காரணமாக அவர் திணைக்களத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேவேளை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று மாலை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கி இருந்தார். முன்னாள் அமைச்சர்கள் பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, சீ.பி.ரத்நாயக்க, கஞ்சன விஜயசேகர, சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோரிடமும் 9 ஆம் திகதி சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் அவை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.

சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குமூல அறிக்கைகள் ஆறு சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவிடம் வழங்கப்பட்டு, அவர்கள் அவற்றை ஆராய்ந்த பின்னர், சட்டமா அதிபருக்கு அறிவிப்பார்கள்.

இதன் பின்னர் சட்டமா அதிபர் அடுத்த கட்ட விசாரணைகளை நடத்தும் ஆலோசனைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.