உலகம், தொடர் பிரச்சினைகளில் சிக்கி தவிப்பு: ஐ.நா. பொதுச்செயலாளர்

19.01.2023 22:45:24

உலகம் பல முனைகளிலும் தொடர் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கூறினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. அதில், நேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் பங்கேற்றார். அவர் பேசியதாவது:- நமது உலகம் பல முனைகளில் புயலால் பீடிக்கப்பட்டதுபோல் தொடர் பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது. முதலில், குறுகிய கால சர்வதேச பொருளாதார சிக்கல் ஏற்பட்டது.

உலகின் பல பகுதிகள், பொருளாதார பின்னடைவை சந்தித்தன. ஒட்டுமொத்த உலகமும் மந்தநிலையை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று, இன்னும் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. எதிர்கால பெருந்தொற்றுகளை சந்திக்க தயாராக உலகம் தவறி விட்டது. நாம் தாங்கிக்கொண்ட போதிலும், கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை. வரவிருக்கும் பெருந்தொற்றுகளுக்கு சிறிதளவு கூட தயாராகவில்லை.

வெப்பநிலை அதிகரிப்பு பருவநிலை மாற்றமும் ஏற்கனவே சவாலாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் திகிலூட்டக்கூடிய பருவநிலை மாற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் சாதனை அளவை தாண்டிக்கொண்டிருக்கிறது. அதனால், வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பூமியின் பெரும்பாலான பகுதிகள், வாழத்தகுதியற்றதாக ஆகிவிடும்.

பலருக்கு இது ஒரு மரண தண்டனையாக இருக்கும். பாதிப்பை கட்டுப்படுத்தலாம் புதைபடிம எரிபொருளுக்கு அடிமை ஆவதை நிறுத்த வேண்டும். இது இயற்கைக்கு எதிரானது. இத்துடன், வன்முறை, போர் ஆகியவையும் சவால்களாக உள்ளன. இவையெல்லாம், சங்கிலித்தொடர் விபத்தில் கார்கள் ஒன்றின் மீது ஒன்று குவிவதுபோல் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கடினம். இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

அதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது.பருவநிலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் பேசினார்.