வடகொரியாவைப் போல சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சி!
|
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயன்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண குற்றம் சாட்டினார். |
|
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு மக்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை முற்றாகப் புறக்கணித்துவிட்டு முழு உலகமும் எதிர்க்கும் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரேயொரு அரசியல் கட்சி மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி ஆட்சிமுறையை அமைத்து, தேர்தல்கள் இன்றி நீண்ட காலம் ஆட்சியைத் தொடரவே அரசாங்கம் திட்டமிடுகிறது. இருப்பினும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தமது உயிரைத் தியாகம் செய்யக்கூட எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளனர். வடகொரியாவைப் போன்று ஊடக சுதந்திரம், நீதித்துறை சுயாதீனம் மற்றும் மனித உரிமைகள் அற்ற ஒரு சூழலை இலங்கையிலும் உருவாக்க அரசாங்கம் முயல்கிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாலேயே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பறிபோனது. தற்போதைய அரசாங்கம் சட்டப்பூர்வமான முறையில் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்வதாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் இந்த 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகின்றன. எதிர்க்கட்சியினரே சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதாக அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மையான அமைப்புகள் ஏமாறும் அளவுக்கு அறிவில்லாதவர்கள் அல்ல. நாட்டில் நடக்கும் அநீதிகளை முழு உலகமும் அறிந்து வைத்துள்ளதால், அரசாங்கத்தின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளால் இலங்கை சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். |