சிரியாவில் அசாதாரண சூழல்
சிரியா நாட்டில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவிவரும் நிலையில் அந்நாட்டில் இருந்த 75 இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு விமான மூலம் இந்தியாவுக்கு திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில் அந்நாட்டில் அசாதாரண அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 44 பேர் உள்பட சிரியாவில் 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் விமானங்கள் மூலம் இந்தியா திரும்ப உள்ளனர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணிகளை டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டதாகவும் மேலும் சிரியாவில் இந்தியர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக +963 993385973 என்ற உதவி எண்ணிலும் hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் அஞ்சலிலும் தொடர்பு கொண்டால் இந்தியாவுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதுவரை 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இந்தியர்கள் சிரியாவில் இருப்பதாகவும் அவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.