கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை.

16.11.2025 13:54:49

திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ?

 

இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்குப் பின் தமிழகத்தில் இருந்து வந்த தூதுக்குழுவில் திருமாவளவன் இடம்பெற்றது தவறு என்றும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள்.அதனால் அவரை விமர்சிக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களின் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் திமுகவின் மீதும் திருமாவளவனின் மீதும் தொடர்ச்சியாகக் கோபத்தோடு காணப்படுகிறார்கள்.எனினும்,கடந்த 2018ஆம் ஆண்டு அவர் வருகை தந்தபோது காட்டப்படாத அளவு எதிர்ப்பு ஏன் இந்த முறை காட்டப்படுகிறது?

திருமாவை ஊருக்கு அழைத்தது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.அது இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு உறவாக இருக்கிறது.தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டுக்குள் பசுமை இயக்கமும் ஓர் அங்கம். எனவே திருமாவை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாக்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பாரம்பரியம்தான்.அக்கட்சியானது தொடக்கத்தில் இருந்தே தன்னை பெருமளவுக்கு தூய்மைவாத கட்சியாகவும் தீவிர தேசியவாத கட்சியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நேரடி வாரிசாகவும் காட்டிக்கொண்டது. ஏனைய கட்சிகளை அவர்கள் இந்த அளவுகோல்களின் ஊடாகத்தான் அளந்தார்கள்.எனவே அக்கட்சியோடு கூட்டில் இருக்கும் ஐங்கரநேசன் திருமாவை அழைத்தபோது அக்கட்சியை அடிப்பதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக கட்சியின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். 2018இல் திருமா யாழ்ப்பாணம் வந்தபோது இந்த அளவு விமர்சனங்கள் ஏழவில்லை.

 

அப்பொழுது ஐங்கரன்நேசனை யாரும் அவமரியாதையாக விமர்சிக்கவில்ல்லை.ஆனால் இப்பொழுது திருமாவோடு சேர்த்து ஐங்கரன் நேசனும் விமர்சிக்கப்படுகிறார்;அவமதிக்கப்படுகிறார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விமர்சிக்கப்படுகிறது.அப்படிப் பார்த்தால் இந்த விமர்சனங்களின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு உண்டு.

இப்படிப்பட்ட ஒரு விமர்சனச் சூழலை உற்பத்தி செய்ததில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு.அக்கட்சி தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தாறுமாறாக விமர்சிக்கும் பண்பைக் கொண்ட ஒரு கட்சி.ஏன் என்னையும்கூட அவர்கள் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் ஆக்கியது அந்த கட்சிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாத அளவுகோல்களை வைத்துக்கொண்டு தமது அரசியல் எதிரிகளை தமது தராசுகளால் நிறுத்த கட்சி அது. இப்பொழுது சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். திருமாவின் யாழ் வருகையை விமர்சிக்கும் ஒரு பகுதியினர் அந்த விமர்சனங்களை யாருடைய பார்வைக்கு முன் வைக்கின்றார்கள்? ஏற்கனவே தூய்மைவாத தமிழ் தேசிய அளவுகோல்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சித்த கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களை நோக்கித்தான்.

அதுமட்டுமல்ல,இப்பொழுது அதாவது அந்தக் கட்சியின் செயலாளர் திருமாவின் கூட்டத்தில் பிரசன்னமான பின்னரும்கூட,அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் திருமாவையும் ஐங்கரநேசனையும் விமர்சிக்கக் காணலாம்.அக்கட்சியோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும்கூட திருமாவை, ஐங்கரநேசனை கடுமையாக விமர்சிக்கக் காணலாம்.

 

எனவே இப்பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் திருமாவின் யாழ் வருகை மீது பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இங்குள்ள அடிப்படை உண்மை.

அதேசமயம் 2009 க்குப் பின் மஹிந்த ராஜபக்சவை திருமா சந்தித்தது கைகுலுக்கியது தொடர்பில் அவர் ஏற்கனவே ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியிருக்கிறார். ஆனால் ஒருபகுதி ஈழத் தமிழர்கள் அந்தத் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகளில், ஈழ உணர்வாளர்களில் மிக நீண்ட காலம் ஈழப்போருடன் தொடர்புற்றவர்களில் திருமாவும் ஒருவர்.மாணவராக இருந்ததில் தொடங்கி ஒரு கட்சித் தலைவராக வளர்ந்து,நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது வரையிலும் அவர் ஈழப் போரோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை மிகவும் மதித்து கௌரவமாக நடத்தியது.ஆனால் அந்த இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்,அதைத் தோற்கடித்த தரப்புடன் அவர் கைகுலுக்கியது தொடர்பில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுவாக தமிழ் மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் உண்டு.

ஆனால் அதற்குப் பின்னரும் முன்னரைப் போலவே அவர் ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடுகளோடு தோளோடு தோள் நிற்கிறார்.எனவே,அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும்போது திருமா ஒரு நேச சக்தியா அல்லது பகை சக்தியா என்ற தெளிவு ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்.ஒரு நேச சக்தியை விமர்சிப்பது வேறு. பகைவரை விமர்சிப்பது வேறு. இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.திருமா தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.அப்படித்தான் திராவிடக் கட்சிகளும்.இந்தக் கட்சிகளை விமர்சிக்கும்போது இந்த கட்சிகள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அந்த எட்டுக் கோடி மக்களையும் புண்படுத்தாமல் கவனமாக விமர்சிக்க வேண்டும்.

 

நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒரே இனத்தவர்கள் தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களும்.புவியியல் அமைவிடம் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் உலகில் ஈழத் தமிழர்களுக்கு இனத்தால்,மொழியால், பண்பாட்டால்,இன்னபிற விடையங்களால் கிட்ட இருக்கும் மக்கள் அவர்கள்தான். ஈழப் போராட்டத்தின் போது இருபதற்கும் குறைாதவர்கள் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் நடந்திராத ஒரு விடயம் அது.தீக்குளிப்பது என்பது சாதாரணமானது அல்ல.தன்னையே அழிப்பது. அயலில் வாழும் தனது மக்கள் கூட்டத்திற்காக தம்மையே அழித்திருக்கிறார்கள்.அதுவும் தீயில் கருகி இறப்பது என்பது எவ்வளவு கொடுமையானது? சாதாரணமாக, சமைக்கும்போது அடுப்பு நெருப்புப் பட்டாலே எப்படித் துடிக்கிறோம்?.உலகில் வேறு எந்த மக்கள் கூட்டமும் அவ்வாறு கடலால் பிரிக்கப்பட்ட இன்னொரு மக்கள் கூட்டத்திற்காக அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது இல்லை.எனவே தமிழ் நாட்டு மக்களை எப்பொழுதும் ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலைச் செய்யும். ஏன் ஈழத்தமிழ் கட்சிகள் செய்யாத திருகுதாளங்களா? ஆனால் தமிழக மக்களை ஈழத் தமிழர்கள் என்றென்றும் மதிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் தமிழகத்தை அணுக வேண்டும்.தமிழக மக்கள் மீதுள்ள அளவு கடந்த மதிப்பின் காரணமாக அவர்களுடைய தலைவர்களை விமர்சிக்கும் போது அடிப்படை நாகரீகத்தைப் பேணவேண்டும்.

அதுமட்டுமல்ல அரசு இல்லாத தமிழ் மக்களுக்கு அயலில் உள்ள அரசு.அதுவும் பேரரசு இந்தியாதான்.இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ஆசைப்பதற்கு ஈழத் தமிழர்களுக்குள்ள ஒரே நொதியம் தமிழ் நாடுதான்.

 

மேலும்,இப்பொழுது தமிழ் மக்களின் அரசியல் பெருமளவுக்கு ஐநா மைய அரசியலாகவே காணப்படுகிறது. அண்மையில் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் அந்த தீர்மானம் தங்களை ஏமாற்றி விட்டது என்று கடும் கோபமாக இருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை தமிழர்களுக்கு என்றுகூறி முன்நகார்த்திய நாடு எது? பிரித்தானியா. பிரித்தானியா முதலாவது கட்ட ஈழப் போரில் யாரோடு நின்றது? இலங்கை அரசாங்கத்தோடு நின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவிகளையும் பிரித்தானியா செய்தது. ஆயுத தளபாடங்கள், ஆலோசனைகள் மட்டுமல்ல, பிரித்தானிய கூலிப் படைகளும் களத்தில் இறக்கப்பட்டன. ஈழத் தமிழர்களை ஆட்சி செய்த மூன்று குடியேற்றவாத நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.அரசோடு இருந்த தமிழ் மக்களை அரசற்ற மக்களாக மதிப்பிறக்கியதில் பிரித்தானியாவுக்கும் பங்கு உண்டு.அதோடு முன்கூறியது போல முதலாம் கட்ட ஈழப்போரில் இனஅழிப்பைச் செய்த அரசாங்கத்தை ஆதரித்த நாடுதான் பிரித்தானியா.

ஆனால் அதற்காக ஐநாவில் பிரித்தானியாவின் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களா? இல்லை. அதுதான் அரசியல்.அரசு இல்லாத தமிழ் மக்கள் அரசுகளை அரவணைத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.எனவே ஈழத் தமிழர்கள் அரசுகளை அரவணைக்க வேண்டும்.

 

மேற்கு நாடுகளை,ஜநாவைக் கையாள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நொதிக்க வேண்டும்.இந்திய அரசைக் கையாள்வதற்கு,தமிழ் நாட்டு மக்கள் நொதிக்க வேண்டும்.எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தைப் பக்குவமாகக் கையாள வேண்டும்.

உலகிலேயே முதலாவது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில்தான்.உலகின் மிகப்பெரிய தமிழ்ச் சட்டமன்றம் அது. அதுபோலவே உலகில் இன அழிப்பு நினைவுச் சின்னங்களை தமிழர்கள் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முன்பு முதலாவது நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது தஞ்சாவூரில்தான்.தமிழகத்தில்தான். எனவே தமிழகத்தை ஈழத் தமிழர்கள் பக்குவமாகக் கையாள வேண்டும். அரசு இல்லாத ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்களைச் சம்பாதிக்கின்றதோ,அவ்வளவுக்கு அவ்வளவு அனைத்துலக அரங்கில் பலமாக நிற்கும்.

திருமாவின் உறவு தொடர்பான விடயம் தனிய,தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் இந்தியாவைக் கையாளுவது தொடர்பான ஒரு வெளியுறவு விவகாரமுந்தான்.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியும் மோதல் நிலையும் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவது என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் தத்தளிக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.