காணிகளை ஒப்படைக்கக் கோரி திங்களன்று திரளவுள்ள வலி.வடக்கு மக்கள்!

12.06.2026 15:52:04

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

 

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி, அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி , தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு அறிவித்துள்ளது.

தமது போராட்டத்திற்கு கட்சி பேதங்கள் இன்றி , அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.