ஜனாதிபதி செயலாளருடன் நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு!

03.07.2025 09:33:04

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போது நெதர்லாந்தில் உள்ள இலங்கையின் பழங்காலப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மீளக் கொண்டுவருவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தப் பணியில் இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பொனி ஹோர்பாக் (Bonnie Horbach), இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

 

காலனித்துவ நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த, நெதர்லாந்து அரசாங்கம் காலனித்துவ காலத்து கலைப்பொருட்களை உரிய நாடுகளுக்கே மீண்டும் திருப்பி வழங்குவதற்கான கொள்கை முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அவர்கள் அந்தக் கலைப்பொருட்களை மீளமைப்பதற்கான ஆரம்பமாக ஒரு ஆராய்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளதுடன், அந்நாட்டில் உள்ள காலனித்துவ கலைப்பொருட்கள் தொடர்பில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பமாக, இலங்கையின் தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் தலைமையில் இரு நாட்டு ஆய்வாளர்களும் நெதர்லாந்தில் உள்ள ஓலைச்சுவடி கையெழுத்துப் பிரதிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கலாசார அலுவல்கள் தொடர்பான நெதர்லாந்து தூதுவரின் ஆலோசகர் கிரிஷேன் மெண்டிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.