சர்வதேச பொறிமுறையாக தரமுயர்த்த வலியுறுத்தல்!

06.10.2022 10:00:00

சிறிலங்காவிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றம் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்த வேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையையும் பரிந்துரைகளையும் நாங்கள் பாராட்டுகின்றோம்.

சவாலுக்குள்ளாகியுள்ள ஆதார சேகரிப்பு

இன்று நாங்கள் ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பில் காணப்படும் சவால்கள் குறித்தும் சாட்சிகளின் பாதுகாப்பிற்கான பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டிய அவசரதேவை குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை 46/1 தீர்மானத்தின் அடிப்படையிலான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை போதுமானதல்ல அதனை முழுமையான சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்த வேண்டும்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதற்காக முழுமையான ஆதாரங்களை சேகரிப்பது அடிப்படையாக அமையும் அதேவேளை சாட்சிகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் பலவீனமாக உள்ளன.

சுயாதீன பொறிமுறை அவசியம்

புலனாய்வு உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதற்கு மிரட்டுவதற்கு பயன்படுத்துவது என்பது சாட்சியங்களை ஒன்றுசேர்ப்பதற்கு பெரும் தடையாக உள்ளது. அரசாங்கத்திலிருந்து சாட்சிகளை பாதுகாப்பதற்கான சுயாதீனமான பொறிமுறையை ஐ.நா குழு முன்வைக்க வேண்டும்.

மேலும் அச்சுறுத்தல்களிற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளிக்கும் அரசாங்க அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.

வீடுகளிற்கு வரும் பாதுகாப்பு படையினர் பாலியல்வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற அச்சங்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடமிருந்து விசாரணைக்கு வருமாறு கடிதங்கள் கிடைப்பதும் இலங்கையில் உண்மையில் இடம்பெறும் சம்பவங்கள்.

வருடக்கணக்கில் தாமதமாகியுள்ள நீதி

மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து விசாரணைக்கு வருமாறு அழைக்கப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமானவர்களிற்கு எதிராக ஐ.நா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். 13 வருடங்கள் தாமதமாகிவிட்ட நீதியை வழங்க வேண்டும்.

தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டும்” என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.