இந்தியா கொடுத்ததை அரசாங்கம் ஏன் மறுத்தது?
|
சீனா கடன் வழங்கும் போது அதனை பெற்றுக்கொள்ள முன்னிலையாகும் அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா 63 மில்லியன் டொலரை வழங்குவதற்கு முன்வந்த போது அதனை பெற்றுக்கொள்ளவில்லை. அந்த அமைச்சர் தான் தற்போது துறைமுக அமைச்சில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் நன்கொடையை அரசாங்கம் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். |
|
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் தொடர்பான சபை ஒத்த்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்துக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் முன்மொழிவு வரவேற்கத்தக்கது.நாங்கள் இதனை வரவேற்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொருத்தவரையில் போக்குவரத்து பிரதான அம்சமாக காணப்படுகிறது. போக்குவரத்து வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் இந்த இரண்டு மாகாணங்களும் அபிவிருத்தியடையாமல் இருப்பதற்குரிய பிரதான காணியாக உள்ளது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொனராகலை ஊடாக மட்டக்களப்புக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் முன்மொழிவு ஒன்று காணப்பட்டது.அதேபோல் தம்புள்ளை - வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டமும் காணப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டம் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது வரவேற்கத்தக்கது. எமக்கும் அது பயனானதாக இருக்கும். மீரிகம -கடவத்த அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி கருத்திட்டத்துக்கு சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த கடன் குறித்து அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். சீனா கடன் வழங்கும் போது அதனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்னிலையாகுகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா 63 மில்லியன் டொலரை வழங்குவதற்கு முன்வந்த போது அரசாங்கம் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. அந்த அமைச்சர் தான் தற்போது துறைமுக அமைச்சில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீனாவுடன் கடந்த அரசாங்கங்கள் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தற்போதைய ஜனாதிபதி சீனா கொடுக்கல் வாங்கலை தொடர்புப்படுத்தி குற்றஞ்சாட்டினார்.இன்று அந்த நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று செயற்பட போகிறதா என்றார். |