ஃபெஞ்சல் புயல் நிவாரண உதவி: ரூ. 10 லட்சம் அறிவித்த திருமா!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. |
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவி பதிவிட்டுள்ளார். அதில், "அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது." "சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். |