தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுவிழா

25.09.2022 02:00:00

2022 ம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுவிழா இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்பது இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டின் நோக்கமாகும். அதேவேளை இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டில் பங்குபெறும் விளையாட்டுவீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெற்றி ஈட்டுவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

நேற்றைய தினம் மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் இடையில் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி நடைபெற்றது. அந்த சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் உதயம் விழிப்புலனற்றோர் அணி வெற்றி ஈட்டியது.

ஒவ்வொரு தடவையும் Tamil Para Sports நடைபெறுகின்ற போதும் ஒரு விஷேட நிகழ்வாக சத்தப்பந்து கிரிக்கட் போட்டி நடைபெறுவதோடு, இந்த போட்டியில் பங்குபற்றும் வீரர்களில் சிலர் இலங்கையின் தேசிய சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தேசிய சத்தப்பந்து கிரிக்கட் போட்டி குழுவின் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசும் போது, இவ்வாறான போட்டிகளில் பல சத்தப்பந்து கிரிக்கட் வீரர்களை உருவாக்க கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவர்கள் தேசிய அணியில் போட்டியின் அடைப்படையில் தெரிவு செய்வதற்கு தாங்கள் ஏற்பாடுகளை செய்ய முடியும் என குறிப்பிட்டார். இந்த Tamil Para Sports நாளை வெபர் மைதானத்தில் கோலாகலமான நிறுவு நாள் நிகழ்வுகளோடு நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.