தேர்தல்கள் கூட்டணி ஓகஸ்ட் 8 கைச்சாத்து

24.07.2024 08:16:31

 

அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத்தெரிவித்தார். 

சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் என சகல சமூகங்களையும் சேர்ந்த தரப்பினரை இணைத்துக் கொண்டு இக்கூட்டணியை அமைப்போம். இக்கூட்டணியில் சிங்கள, தமிழ்,முஸ்லிம் பர்கர் என்ற சகோதர சமூகங்களின் கட்சிகளும் எம்மோடு கைகோர்க்கவுள்ளனர். அவ்வாறு 30 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் எம்மோடு கைகோர்க்கவுள்ளனர்.

இந்நாட்டிலுள்ள சகல இனத்தவர்களையும் சகல மதத்தவர்களையும் இணைத்துக் கொண்டே டி.எஸ்.சேனாநாயக்க   1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபித்தார். இன்று சஜித் பிரேமதாச   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக இந்நாட்டிலுள்ள சகல இனத்தவர்களையும் சகல தரப்பினரையும் இணைத்துக் கொண்டு இந்த கூட்டணியை ஸ்தாபிப்பார்.

எதிர்வரும் ஆகஸ்ட்  8 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடுவோம். நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினை, சட்டத்தின் ஆட்சியிலுள்ள வீழ்ச்சி, விழுமியம் என்பவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக எமது கொள்கை வகுப்பாக்கதை மேற்கொள்வோம். ஊழல் இல்லாத நாடு குறித்து சிந்திக்கும் பல தலைவர்கள் இக்கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.