கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!
சமீபத்தில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட படம் ஒன்றில் தான் படமாக எடுக்க உள்ள ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியாகி வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நாவல் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’. இந்த நாவலை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதி இருந்தார். இந்த நாவலை படித்த இயக்குனர் ஷங்கர் இதை 3 பாக படமாக எடுப்பதற்காக முறைப்படி உரிமைகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட வாரிசு நடிகர் ஒருவர் நடித்த படத்தின் ட்ரெய்லர் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் வேள்பாரி நாவலின் காட்சிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குனர் ஷங்கர் கொதித்தெழுந்துள்ளார்
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஷங்கர் “சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலின் காப்புரிமையை கொண்டுள்ளவன் என்ற முறையில், அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ஒன்றில் அந்த நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. இத்தகைய விஷயங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். படைப்பாளிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனுமதியின்றி நாவலின் காட்சிகளை படமாக்காதீர்கள். மீறினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.