ஆட்டம் காணும் தென்னிலங்கை அரசியல்

13.05.2022 09:04:57

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் வங்குரோத்து நிலைக்குச் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"தென்னிலங்கையில் அரசியல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் அரசியல் கட்சிகள் சேற்றில் மீன்பிடித்து கட்சி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை" என இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நிகழ்வுகளும் அரசியல் தீர்மானங்களும் ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்கு அமைவாக அமைய வேண்டும்.

போராட்டங்களின் போது கொலைகள், தீ வைப்பு, சொத்து சேதம் என்பன இடம்பெறக்கூடாது என தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போது தென்னிலங்கை மக்களால் மகத்தான மனிதர் என போற்றப்பட்ட மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கோபத்தில் தற்போது தென்பகுதி மக்கள் உள்ளனர்.

தமிழ் மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை என்றும் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அரசியல் கட்டமைப்பையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் ராஜபக்ச ஆட்சியை ஒருபோதும் விரும்பியதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.