இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதிகரித்த மன நோயாளிகள்!

22.01.2023 15:14:00

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக பலரும் மன நோயாளிகளாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.

மன நோய் அதிகரிப்பு  

பொருளாதார நெருக்கடியின் பின்னர் மனநல சிகிச்சைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

மன நோய்க்கு உரிய சிகிச்சையினை பெற்று வந்தவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதன் காரணமாக அவர்களுக்கு மீண்டும் மனநோய் அதிகரித்துள்ளதாக மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.

இளைஞர்,யுவதிகள்

இதேவேளை, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமக்கு எதிர்காலம் இருக்காது எனும் விரக்தியால் இளைஞர்,யுவதிகள் மத்தியிலும் மனநோய் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத அழுத்தங்கள் மற்றும் பணப்பற்றாக்குறை என்பன மேலும் இளைஞர்,யுவதிகள் மத்தியில் மனநல பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது என மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள்

உரிய நேரங்களில் தமது கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியாமல் இருக்கின்ற பிள்ளைகளிடமும் மனநோய் அதிகரித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா காலப்பகுதியில் இணைய வழி கற்பித்தல் காரணமாக பெரும்பாலான பிள்ளைகள் தொலைபேசிக்கு அடிமையானதனால் மனநோய் விகிதம் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.