சிங்கள பௌத்த பெயரில் தமிழரை கொல்வது தேசப்பற்றாகாது !

25.07.2021 11:01:45

சிம்பாப்வே அல்லது வெனிசுவேலா நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் நகர்வொன்றை ஆரம்பிக்கும் நோக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை தற்போதைய அரசாங்கத்திற்கு ஒப்படைத்த போது தாம் நிதி அமைச்சராக பதவி வகித்ததாகவும் அப்போது அந்நிய செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டொலர்கள் காணப்பட்டதாகவும் அந்த தொகை எதிர்வரும் நாட்களில் 2.6 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பமாக இதனை கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் அரச வருமானங்கள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வரவு செலவுத் திட்ட இடைவெளியும் பாரியளவில் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை அச்சிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட பொருட்களுக்கு வரிசையில் நிற்கும் காலத்தை விடவும் மோசமான சிம்பாப்வே மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளின் பொருளாதார நிலைமைக்கு இலங்கை செல்லக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் உரத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க டொலர் பற்றாக்குறையினால் வெளிநாடுகளிலிருந்து மருந்துப் பொருட்கள் தருவிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவ்வாறு ஏற்பட்டால் அதனை அரசாங்கம் மூடி மறைத்துவிட்டு உடல் நலத்திற்கு நன்மை ஏற்படும் அதனால் சைக்கிளில் பயணிக்குமாறு கோரப்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று என்ற போலி கொள்கைகளின் காரணமாக இந்த நாடு பல தசாப்தங்களாக பின்நோக்கி நகர்ந்து சென்றுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தேசப்பற்று என்று மக்களை ஏமாற்றிய அரசாங்கத்தை மட்டுமன்றி அதற்கு ஏமாற்றமடைந்த மக்களும் இந்த அழிவிற்கு பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்தார் என்பதனை விடவும் அவர் பிரதிநிதித்துவம் செய்த கொள்கைகளே இன்று தோல்வியடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். இனவாத, மதவாத காலம் கடந்த பழைய கொள்கைகள் கோட்பாடுகளே தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே நாட்டு பற்று என்ன என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த பெயரில் தமிழரை கொல்வது தேசப்பற்றாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்களம் என்று சொல்லி கடைகளை எரிப்பதனாலும், வீடுகளை உடைப்பதனாலும் அதிகளவில் பாதிக்கப்படுவது இறுதியில் சிங்களவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜாபக்ச விரோத கூட்டணிகளை அமைப்பதில் மட்டும் வெற்றி கிடைக்காது கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன் தேசிய கொள்கைகள் உருவாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.