தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா.

15.09.2026 15:03:32

தமிழக சட்டசபையில் சமீபத்தில் 'தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026' நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதாவால் யாருக்கும் லாபம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். தமிழக சட்டசபையில் சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு 'தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026'-வை நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் வருகின்றன. குறிப்பாக கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தவெகவின் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  

 

சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக சார்பில் மாஜி உயர்கல்வித்துறை அமைச்சர் கேவி செழியனும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் அந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் தான். இந்த மசோதாவில் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நில அளவு மற்றும் வைப்பு நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க 12 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் எனவும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர் நிலமும், மற்ற பகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் இருந்தால்போதும் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிலப்பற்றாக்குறை இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்குத் தேவையான நிலையான அறக்கட்டளை நிதியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 2019-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு தான் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இந்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் உயர் கல்வியை முழுக்க முழுக்க வணிகமயமாக்குவதையும், தனியார்மயமாவதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதேவேளையில் தமிழக அரசோ உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதே இந்த மசோதாவின் நோக்கம் என்று விளக்கம் அளிக்கிறது. இந்நிலையில் தான் கல்வியாளர்கள் தரப்பில் இந்த மசோதாவை முதல்வர் விஜய் அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: '' தவெக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவில் நிலம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சி பகுதிகளில் 18 ஏக்கர், மற்ற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முடியும் என்று மசோதா சொல்கிறது. அதேபோல் இதுவரை ரூ.50 கோடியாக இருந்த அறக்கட்டளை வைப்பு தொகை, ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இது கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதுமட்டுமின்றி தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை வரலாம். அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு முறை முறையாக பின்பற்றப்படும். ஆனால் தனியார் பல்கலைக்கழகங்களி்ல அப்படி இருக்குமா? என்பது கேள்விக்குறி. அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் படிப்படியாக குறைக்கப்படலாம். இதற்கு உதாரணம் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டிபி ஜெயின் கல்லூரியில் நடந்த சம்பவத்தை கூறலாம். முதலில் அரசு உதவி பெறும் கல்லூரியாக இருந்த இந்த கல்லூரி தற்போது சுயநிதி கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த பாணியில் பல அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாற முயற்சிக்கலாம்.

இதனால் தான் தனியார் பல்கலைக்கழகங்களுக்காக இப்படியான திடீர் சலுகைகள் ஏன்? யாரை திருப்திப்படுத்த தவெக அரசு நினைக்கிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுதவிர அதேபோல் ஒரு பல்கலைக்கழகத்தில் எத்தனை துறைகள் இருக்கும்? ஆய்வகங்கள், நூலகங்கள், ஆய்வு மையங்கள், மாணவர் வசதிகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு இடம் தேவைப்படும்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ஒரு பல்கலைக்கழகம் என்பது மாணவ - மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். அதனை எப்படி அரசு கண்டறியும் என்ற கேள்விகளும் எழ வாய்ப்புள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை பல பல்கலைக்கழகங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம், சட்டம், ஆசிரியர் கல்வி, திறந்தநிலைக் கல்வி எனப் பல்வேறு துறைகளுக்கான அரசு பல்கலைக்கழகங்களும் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. தற்போது அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனை அரசு சரிசெய்யலாம். மாறாக தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு வழிவகுத்து கொடுப்பது என்பது பேராசிரியர் இல்லாத அரசு பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கையை குறைக்க கூட வாய்ப்புள்ளது.

மேலும் தனியார் பல்கலைக்கழங்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படலாம். இது மாணவர்களுக்கு பாதிப்பை தரலாம். உயர்கல்வி என்பது திறமை இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பாக இல்லாமல், அதிக கட்டணம் செலுத்தக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக மாறிவிட கூட வாய்ப்புள்ளது. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் முதலாளிகளுக்கு சாதகமாக இந்த மசோதா மாறும் அச்சம் உள்ளது. இதனால் இந்த நடவடிக்கையை முதல்வர் விஜய் அரசு கைவிட வேண்டும் என கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.