சரணடைந்த ஜி.வி.பிரகாஷ்
பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “என்னை தங்கலான் படத்தில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. இதை நான் பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன். இந்த வாய்ப்பை சிறந்த முறையில் கொடுக்க முயற்சி செய்துள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். தெய்வத்திருமகள் படத்திற்குப் பிறகு எங்கள் கூட்டணியில் இந்த படம் சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். பா.ரஞ்சித் நிறைய படங்கள் பண்ணியுள்ளார். இருந்தாலும் இந்த படம் அவரின் பெரிய லட்சியத்திற்கானது. தயாரிப்பாளருக்கு இந்த படம் ஒரு தங்கமாக அமையும்.
தங்கலான் படக்குழுவினர் எல்லோரும் பயங்கரமாக உழைத்துள்ளனர். அவர்களோடு சேர்ந்து நானும் ஒரு சின்ன பகுதியாக உழைத்துள்ளேன். பழங்குடியினர் இசையையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் நேர்மையாகப் பதிவு செய்ய முயற்சி செய்து, என்னுடைய சிறந்த இசையை கொடுத்துள்ளேன். நீங்கள் கேட்டுவிட்டு, பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களிடம் அதை விட்டுவிடுகிறேன்” என்றார்.