சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி!

23.10.2021 17:33:37

ஐ.சி.சி .ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இன்று ஷேக் சயீத் (Sheikh Zayed Stadium )மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் ஐடன் மார்க்ராம்( Aiden Markram) அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா(Josh Hazlewood, Adam Zampa) மற்றும் மிட்செல் ஸ்டார்க்(Mitchell Starc )ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 34 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே (Anrich Nortje) 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, இன்றிரவு 7.30க்கு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மற்றுமொரு சூப்பர் 12 சுற்று போட்டி ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.