பதிலடி கொடுக்க தயாராகுங்கள்

29.09.2022 00:31:37

அரசுக்கு தகுந்த பதிலடி

தேர்தலில் வாக்களிப்பது மக்களின் மிக முக்கியமான கடமை எனவும், தங்களின் வாக்களிப்பு வழியாக, மக்கள், அரசுக்கு தகுந்த பதிலளிக்க முடியும் எனவும், கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர்ப் பகுதியான மத்துமகல பிரதேசத்தில் உள்ள தூய இருதய ஆலயத்தில் இவ்வாறு பேசியுள்ள, கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் , நாட்டின் பொதுத் தேர்தலோடு, உள்ளூராட்சி தேர்தல்களையும் நடத்தவேண்டும் என்று, தேசிய தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

அன்றாட உணவிற்கே கஷ்டப்படும்  மக்கள்

 

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நடுத்தர மக்கள் ஏழ்மை நிலைக்கு மாறி, அன்றாட உணவிற்கே கஷ்டப்படுகின்றனர் எனவும், ஞாயிறு மறைக்கல்விக்கு வரும் சிறார்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்படவேண்டியுள்ளது எனவும் கூறியுள்ள கர்தினால் இரஞ்சித், இந்நிலை மாற உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மத்தியதர வர்க்கம் தற்போது ஏழை வகுப்பில் வீழ்ந்துள்ளதாகவும், பெரிய வீதிகள் மற்றும் பெரிய கோபுரங்களை உருவாக்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் காட்ட முடியாது எனவும் கர்தினால் தெரிவித்தார்.

பெரிய விமான நிலையம் கட்டினாலும், ஒரு விமானம் கூட நிற்காது எனவும் கர்தினால் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தல், நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்தல் நடைபெறாது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்

இதற்கிடையே, தேர்தல் நடைமுறைகள் ஊழலால் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ளன என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமால் புஞ்சிஹேவா அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளான நிலையில்,  முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா, “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் என்ன என்று அறிய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றும், அதற்கு “தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களில் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என 800 பேர் இலங்கையைவிட்டுச் சென்றுள்ளதாகவும், இதனால் இலங்கையின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளார், கரு ஜெயசூரியா.

மேலும் இலங்கையில் 23 இலட்சம் சிறார் உட்பட, 57 இலட்சம் மக்கள் அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்களாக உள்ளனர் என்று,யுனிசெவ் (UNICEF) அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.