பாதுகாப்பு உறுதி இந்தியா ஆதரவு!

08.02.2025 09:35:23

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதோடு, பண்டைய வரலாற்றிலிருந்து பிணைந்திருக்கும் இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவசரகால பேரிடர் சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இந்திய உயர் ஸ்தானிகர் உறுதிப்படுத்தினார்.

இந்தியா இன்றுவரை வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய பங்கையும் உறுதிப்படுத்தினார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்.